Sunday, February 20, 2011

அமைதிக்காக நீதியை தியாகம் செய்ய முடியாது

காஞ்சிபுரம், மதுராந்தகம் வட்டத்தில் வயல் வெளிகளைக் கடந்து ஊருக்கு செல்லும்போது உயர்ந்து நிற்கிறது 190 வருட பழமை மிக்க தூயஆரோக்கிய அன்னை தேவாலயம். பழமையும், கம்பீரமும் உடைய இத் தேவாலயத்தின் கல்லறையில் இதுவரை தலித் மக்களின் உடல் புதைக்கப்படவே இல்லை . தலித் மக்கள் பல வருடங்கள், தொடர் போராட்டங்கள், எண்னெற்ற முயற்சி கள் என்று தொடர்ந்தபோதும் கல்லறை உரிமை என் பதை சாதி ஆதிக்க சக்திகள் தொடர்ந்து மறுத்துள்ளனர். இத்தோடு வழிபாட்டில் சம உரிமைகோரி இத்தேவால யத்தில் நடத்தப்பட்ட போராட்டத்தில் 12 வருடம் இக் கோவில் பூட்டப்பட்டிருந்ததும் நீதிமன்ற உத்தரவு பெற்று தான் திறக்கப்பட்டுள்ளது.

தேவாலயம் பூட்டப்பட்டதற்கான காரணம் ஒன்று தான். ஆலயத்தின் மையப்பகுதியில் தலித் மக்கள் அமரக் கூடாது என்பதுதான். இந்த உரிமை மீட்கப்பட்டு திறக்கப் பட்ட நிலையில் கல்லறை உரிமை தலித் மக்களுக்கு மறுக் கப்பட்டே வந்துள்ளது.

2011 ஜனவரி 22 அன்று தலித் இளைஞன் வேளாங் கண்ணி மரணம் அடைகிறார். அவரை தேவாலயக் கல்ல றையில் அடக்கம் செய்ய கடும் எதிர்ப்பு ஆதிக்க சாதியின ரால் தெரிவிக்கப்படுகிறது. தலித் மக்கள் ஒன்றிணைந்து சட்டமன்ற உறுப்பினர் லதா உடனிருக்க அடக்கம் செய்யப் படுகிறது. அடக்கத்திற்காக குழி வெட்டிய இராஜேந்திரன் இறுதி நிகழ்ச்சி முடிந்தபின் மாலை தோட்டத்திற்கு செல் கிறார் இரவாகிறது.

அடுத்த நாள் விடிகிறது தோட்டத்திற்கு சென்ற இராஜேந்திரன் வீடு திரும்பவில்லை. காவல்துறையினரி டம் ஜனவரி 23 அன்று புகார் தெரிவிக்கப்படுகிறது. ஜன வரி 24 அன்று மாலை இராஜேந்திரன் ஏரியில் கொலை செய்யப்பட்டு பிணமாக மிதக்கிறார்.

தச்சூர் இராஜேந்திரனை கொலை செய்த கொலை யாளிகளை கைது செய்யக்கோரியும், அவரது உடலை பொதுக் கல்லறையில் புதைக்கும் உரிமை கோரியும், உரிய இழப்பீடு கோரியும் உடல் வாங்க மறுக்கப்படுகிறது. ஜன வரி 25 காலை தச்சூர் தலித் மக்களின் வாழ்வில் மீண்டும் ஒருநாள் அல்ல. மதுராந்தகத்தில் கோரிக்கைக்காக விடுதலை சிறுத்தைகள், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்பு கள் ஒன்றுபட்ட எதிர்ப்பாக ஆர்ப்பாட்டம் செய்கிறது.

இந்நிலையில் மூவரை காவல்துறையினர் கைது செய் கின்றனர். எனவே, தச்சூர் இராஜேந்திரன் உடல் பெறப் பட்டு கிராமம் நோக்கி விரைகிறது. எஸ்.பி, எ.எஸ்.பி, டி.எஸ்.பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் ஆகியோர் தங்கள் கைகளில் லத்திக்கள், கவ சங்கள் அணிந்து போருக்கு போகும் உணர்வோடு, ரப்பர் குண்டு வைத்து போராட்டக்காரர்களை கலைக்கும் அதி நவீன ஆயுதங்களோடு முழு பலத்தோடு மனுநீதியை தேவா லயத்தில் பாதுகாப்பதற்காக அணிவகுத்து நிற்கின்றனர்.

அரசியல் சட்டமும், உறுதிமொழியும் மறந்து போன வர்களுக்கு சட்ட அறியாமையை, சட்டம் மன்னிக்கா விட்டாலும் மீண்டும் நாம் எடுத்துரைத்தோம். திரண்டு நின்ற உரிமைக்கான கூட்டத்தின் ஆவேசக் குரல் ஆட்சியா ளர்களின் காதுகளை பிளந்தது, ஆட்சியாளர்களும், அதி கார வர்க்கமும் மீண்டும் மீண்டும் கூறினார்கள். ஆதிக்க சாதியினர் கொடுத்த மனு அமைதியை பாதுகாக்க என.

தச்சூர் இராஜேந்திரன் கல்லறை உரிமைக்காக உயிர் தந்தவன். அவனுக்கு கல்லறை மறுப்பா? அனுமதியோம் என நம் குரல் விண்ணை பிளந்தது. அமைதிக்காக நீதியை தியாகம் செய்ய முடியாதென்று.

நிறைவாக நீதியே வென்றது. சம உரிமையை எட்டியது தேவாலயக் கல்லறை..





ஃபாக்ஸ்கான் போராட்டம் – தமிழக அரசு யார் பக்கம்?


மக்களை இணைக்கும் என்ற அடைமொழியுடன் உலகம் முழுவதும் தன் செல்போன் விற்பனை மூலம் தனக்கென தனி இடத்தை கொண்டுள்ள நிறுவனம் நோக்கியா. அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினால் என்பது மாறி அண்ணலும் நோக்கியா, அவளும் நோக்கியா என்ற நிலை உருவாகியுள்ளது. அந்நிறுவனத்திற்கு தேவையான உதிரி பாகங்களை தயார்செய்வது தான் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பணி. தைவான் நாட்டின் கம்பெனியான ஃபாக்ஸ்கான் 2006ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்பத்தூரில் தன்னுடைய உற்பத்தியை துவக்கியது. இந்நிறுவனத்தில் 1800 நிரந்தர ஊழியர்களும், 6000 தற்காலிக ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும் பகுதி இளம் ஆண்களும், பெண்களும் பணியாற்றுகின்றனர்..

இதில் பெரும் எண்ணிக்கையில் உள்ள தற்காலிக தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியம் ரூ. 150 மட்டுமே. கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றும் இவர்களுக்கு,. இந்திய நாட்டின் தொழிலாளர் நலச்சட்டங்கள் அடிப்படையில் தரப்படவேண்டிய நிரந்தர பணி நியமன ஆணை, ஈ.எஸ்.ஐ, பி.எப் உள்ளிட்ட உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர், திமுகவின் தொழிற்சங்கமான தொ.மு.ச.வை துவக்கினர். 2010 ஜூலை மாதம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் விஷவாயு கசிவு ஏற்பட்டு 200 க்கும்மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.. இது தொழிலாளர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஷவாயு கசிவு ஏற்பட்டதற்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று நிர்வாகத்திடம் தொழிலாளர்கள் கோரியபோது சரியான பதில் இல்லை.

தங்களுக்கு நியாயம் கேட்கும் என உருவாக்கப்பட்ட தொ.மு.ச.வோ நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டது. இதன் காரணமாக நிர்கதிக்கு ஆளான தொழிலாளர் இந்திய தொழிற்சங்க மையத்தை (சிஐடியு) அனுகியுள்ளனர்.. பின் தங்களுக்கான சங்கத்தை உருவாக்கி ஆகஸ்ட் 22 அன்று செங்கொடியை தங்கள் நிறுவனத்தின் முன்பாக ஏற்றினர். ஆகஸ்ட் 24 அன்று ஃபாக்ஸ்கான் நிர்வாகம், தமிழக தொழிலாளர் நலத்துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில் தங்கள் நிறுவனத்தில் வாக்கெடுப்பு மூலம் எந்த சங்கத்திற்கு பெரும்பான்மை என்பதை தீர்மானித்து உதவிட கேட்டுக்கொண்டது. ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்த கடிதத்தின் மீது தொழிலாளர் நலத்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சிஐடியு இத்தொழிற்சாலையில் பணியாற்றக்கூடிய தொழிலாளர்களின் சம்பள கோரிக்கைகாக தாவா ஒன்றை தொழிலாளர் நலத்துறையிடம் எழுப்பியது. தாவா நிலுவையில் உள்ள நிலையில் தொ.மு.ச ஒப்பந்தம் போட முயற்சி செய்தது.. இதனை ஏற்றுக்கொள்ளாத தொழிலாளர்கள் தங்களின் கடைசி ஆயுதமான வேலை நிறுத்தத்தை செப். 23 முதல் துவங்கினர். வேலை நிறுத்தம் அமைதியாக நடந்துவரக்கூடிய நிலையில் அக். 9 அன்று சிஐடியு பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் இ.முத்துக்குமார் உட்பட 319 பேரை கைது செய்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.. ஜாமீனில் வந்த அன்றே மீண்டும் பொய் வழக்கு போட்டு அக் 13ந்தேதி அ.சவுந்தரராசன், இ.முத்துகுமார் உட்பட 12 தோழர்களை கைவிலங்கிட்டு உத்தரமேரூர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர். இது மனித உரிமையையும், உச்சநீதிமன்றம் வகுத்துள்ள நீதிக்கும் முரணானது என்று சவுந்தரராசன் காவல்துறையிடம் எடுத்துரைத்த பின்னும் காவல்துறையின் வக்கிரம் அடங்கவில்லை.

இத்தோடு மட்டுமல்ல, ஸ்ரீபெரும்பத்தூரில் சிஐடியு அலுவலகம் செயல்பட இடம் வாடகைக்கு விட முன்வருபவர்களை திமுக குண்டர்களும், காவல்துறையும் மிரட்டியது. மேலும், ஜாமீன் கேட்டு மனுசெய்யும் போது, செஷன்ஸ் நீதிபதி தற்காலிக விடுப்பு, பேச்சு வார்த்தையின் போது தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளின் விடுப்பு என காலதாமதம் செய்து ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசம் காட்டினர். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் த.மோ.அன்பரசன் நாங்கள் நினைத்தால் நீங்கள் நடக்கமுடியாது, இருக்கமுடியாது, போராட முடியாது கொக்கரித்துள்ளார்.

இப்போராட்டம் நடைபெறும் காலத்தில் தான் தமிழகத்தின் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பல நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டதாக செய்திகள் வெளிவந்தன. அந்த ஒப்பந்தங்களில் என்ன தான் இருக்கிறது, 1) தனி சிறப்பு பொருளாதார மண்டலமாக செயல்படுவது, 2) குறைந்த விலையில் நிலம் 99 வருடத்திற்கு, 3) தண்ணீர் வசதி, 4) குறைந்த விலையில் மின்சாரம், 5) 10 ஆண்டுகள் வரிச்சலுகை 6) தொழிற்சாலை போக மீதி இடத்தை உள்வாடகைக்கு விட அனுமதி என வெளியில் தெரியாத எத்தனையோ சலுகைகள் உள்ளன. அரசிற்குள் அரசாக உள்ள இச்சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இந்திய சட்டங்கள், சட்டங்களின் அமலாக்கம் கேள்விக்குறியாக உள்ளது.

ஸ்ரீபெரும்பத்தூரில் நோக்கியா நிறுவனம் தன் பெயரில் 221 ஏக்கர் பரப்பளவில் சிறப்பு பொருளாதார மண்டலம் வைத்துள்ளது. ஒரு ஏக்கர் 4.5 லட்சம் ரூபாய்க்கு, 99 வருட குத்தகைக்கு இந்நிறுவனம் தமிழக அரசிடம் பெற்றுள்ளது. இம்மண்டலத்தில் 7 நிறுவனங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் ஃபாக்ஸ்கான். இக்குழுமத்தின் வரிச்சலுகை துவக்கப்பட்டது முதல் தற்சமயம் வரை 645 கோடி ரூபாய் தமிழக அரசு வாட் வரி விதிப்பின் மூலம் வரிச்சலுகை தந்துள்ளது.

இப்படியாக அரசின் சலுகைகளை அள்ளிச் செல்லும் நிறுவனத்தில் தொழிலாளர் நிலை என்ன? உலகமயம் காட்டும் பாதையான. தொழிலாளர் உழைப்பை அடிப்படையாக கொண்டு கொள்ளை இலாபத்தை கொண்டு செல்கிறது. ஆனால், உழைப்பிற்குகேற்ற ஊதியம், பணி நிரந்தரம், ஈ.எஸ்.ஐ, பி.எப், ஓய்வு ஊதியம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் சுரண்டி இலாபம் தனக்குமட்டுமே என்ற நோக்கத்தோடு உள்ள கோட்பாடுதான் உலகமயம்.

இளைஞர்களின் உழைப்பை சுரண்டிவிட்டு, அவனை தூரவீசும் கலாச்சாரமே தனியார்மயம். இதுவே நோக்கியா, ஃபாக்ஸ்கான, ஹ¨ண்டாய், ஃபோர்டு என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதில் தமிழக அரசு முதலாளிகள் பக்கமே என்று மீண்டும் வெளிக்காட்டியுள்ளது ஃபாக்ஸ்கான் தொழிலாளர் போராட்டம்

Saturday, July 17, 2010

ஒரு தேர்வும் இரண்டு முடிவுகளும்

ஒரு தேர்வும் இரண்டு முடிவுகளும்
ஜூன் 3 அன்று சென்னை மாநகரம் முழுவதும் கொடிகளும், தோரணங்களும், வண்ணமிகு விளக்குகளில் டிஜிட்டல் பேனர்களும் அலங்கரிக்கப்பட்டு, தமிழக முதல்வரின் பிறந்த நாள் விழா சிறப்புடன் நடந்து கொண்டிருந்தது. அதே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களும், இளம்பெண்களும் இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர் காயிதேமில்லத்தின் மணிமண்டப வாசலில் உண்ணாவிரதம் இருந்தனர்.
ஏன் ? விடுதலை கிடைத்த பின்பும், சமூகப் பாதுகாப்பான வேலை என்பது இந்திய இளைஞர்களின் கனவாக உள்ளது. படித்து, பட்டம் பெற்று வேலைக்கான கடும் போராட்டத்தை நடத்திட வேண்டிய சூழலை 63 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களுக்காக தேர்வு நடைபெற்றது. 109 பணியிடங்களுக்கு நடைபெற்ற இத்தேர்வில் ஒரு லட்சத்தி 25 ஆயிரத்தி 541 பேர் கலந்து கொண்டு தேர்வினை எழுதினர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இத்தேர்வின் முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. தேர்வில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பணிநியமன ஆணைக்காக காத்திருந்தனர். இச்சூழலில் ஆசிரியர் தேர்வு வாரியம் மே 18 அன்று எவ்விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் 48 நாட்கள் கழித்து இரண்டாவதாக மீண்டும் ஒரு தேர்வுப்பட்டியலை வெளியிட்டது.
முதல் பட்டியலில் தேர்வு செய்யப்பட்ட சுமார் 394 பேரின் பெயர் 2வது பட்டியலில் இடம் பெறவில்லை. இந்த இரண்டாவது அறிவிப்பின் காரணமாக பாதிக்கப்பட்ட ஆசிரியர் பட்டதாரிகள் ஜூன் 3 அன்று உண்ணாவிரதம் இருந்தனர்.
தமிழகத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் பல லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சில நூறு இடங்களுக்காக கடும் முயற்சி செய்து, தேர்வு எழுதி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் தேர்வினை சந்தித்து வருகின்றனர். இந்த சூழலில் இத்தகைய குழப்பங்கள் ஏற்படுவது, தேர்வுகளின் மீது மிகப்பெரும் அவநம்பிக்கையை ஏற்படுத்தும்.
தேர்வு பெற்றவர்கள் தேர்வு பட்டியலில் இடம் கிடைத்ததன் காரணமாக தங்கள் சொந்த வேலையையும் விட்டுவிட்டு, இன்று நடுவீதியில் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் பணி நியமனத்திற்காக ஒரு தேர்வு நடத்திவிட்டு அதற்கு இரண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதற்கான காரணத்தை தற்சமயம் வரை தமிழக அரசு அறிவிக்கவில்லை. இந்நிலையில் ஜூன் 18 அன்று சென்னையில் பாதிக்கப்பட்ட ஆசிரிய பட்டதாரிகள் பேரணியை நடத்தினர். இப்பேரணியில் டிஒய்எப்ஐ மாநிலச்செயலாளர் எஸ். கண்ணன், துணைச்செயலாளர் எஸ். பாலா ஆகியோர் பங்கேற்றனர்.
போராட்டத்தில் பங்கேற்று பேசிய டிஒய்எப்ஐ மாநிலச்செயலாளர் எஸ்.கண்ணன், தமிழக திமுக அரசும், முதல்வரும் தலையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய பணிநியமன ஆணை வழங்கிட வேண்டுமென வலியுறுத்தினர்.
பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே துணைமுதல்வர் ஸ்டாலினுக்கும், கல்வித்துறை உயர்அதிகாரிகளுக்கும் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். எனவே, தமிழக அரசு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டவர்களை பணி நியமன செய்யவில்லையெனில் போராட்டம் தொடரும். இப்போராட்டத்திற்கு டிஒய்எப்ஐ முழுஆதரவையும் வெளிப்படுத்தும்.

Wednesday, June 2, 2010

காலத்தின் பயணம்



தாத்தா செய்த வேலையை 
அப்பா செய்யவில்லை ...

அப்பா செய்யும் வேலையை 
மகன் செய்ய போவதாக 
உறுதி இல்லை ...

மகன் செய்யபோகும் வேலையை 
அவன் மகன் செய்வான் என்று 
எந்த உத்திரவாதம் இல்லை ...

ஆனால் 

பாட்டி செய்த வேலையையே 
அம்மாவும் ....

அம்மா வேலையையே 
மகளும்... 

மகள் வேலையையே 
அவளின் மகளும் செய்கின்றனர் ...

ஏன் என அந்த 
அடுபடிக்கும்
தெரியவில்லை ...

என்பதே பாகுபாடு .

Thursday, April 15, 2010

நீதிமன்றத்தில் நித்தியானந்தா


படித்ததில் ரசித்த மின்னஞ்சல் 
 நீதிமன்றத்தில் நித்தியானந்தா
நீதிமன்றம்... விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது.. புதுமையான பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது.. ஆனால்இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானதல்ல... வழக்காட வந்திருக்கும் நானும் ஒன்றும் புதுமையானவன் அல்ல.. வாழ்கை பாதையிலே சர்வ சாதாரணமாக ஏமாற்றிப்பிழைக்கும் சாமியார்களில் நானும் ஒருவன்.. 
சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்..
 
கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்..
 
நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்
.. 
குற்றம் சாட்டப்படிருகிறேன் இப்படியெல்லாம்.. 
 
ஆனால் நீங்கள் எதிர் பார்ப்பீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப்போகின்றேன் என்று... இல்லை நிச்சியமாக இல்லை...
 
சாமி என்று கூறி ஊரை ஏமாற்றினேன்..
  ஏன்??? மக்களை ஏமாற்றவேண்டும் என்பதற்காகவாஇல்லை.. மக்களிடம் காணப்படும் மூடநம்பிக்கை வளரவேண்டும் என்பதற்காக.. 

கதவைத்திற காற்று வரட்டும் என்றேன்..
 ஏன்..??காற்றுவரவேண்டுமென்பதற்காகவாஇல்லை.. அந்த நடிகை ஈசியாக ருமுக்குள் வரவேண்டும் என்பதற்காக...

நடிகைகளை எனது காலைப் பிடித்துவிடும்படி கூறினேன்
.. ஏன்???எனக்கு கால் வலி என்பதனாலேயா?....இல்லை அவள் நான் ஒரிஜினல் சாமியார் என்று என்மீது வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கையை நீக்குவதற்காக....

உனக்கேன் இவ்வளவு அக்கறை
??, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று நீங்கள் கேட்பீர்கள்..

நானே பாதிக்கப்பட்டேன்
நேரடியாக நேரடியாகப் பாதிக்கப்பட்டேன்எனது சுயநலதிலே பொது நலமும் கலந்து இருக்குறது,என்னை குற்றவாளி என்கிறீர்களேஎன் வாழ்கை பாதையை சற்று திரும்பி பார்த்தீர்களானால் நான் வாங்கிய அடிகள் எத்தனைமிதிகள் எத்தனைஉதைகள் எத்தனை என்று கணக்கு பார்க்க இயலும்...

நான் பாடசாலைக்குக் கூடப் போனதில்லை ஆனால் ஆன்மீகப்புத்தகம் படித்திருக்கிறேன்..
நான் நல்ல சன்னியாசியாக இருந்ததில்லை ஆனால் ஊருக்கு உபதேசம் செய்திருக்கிறேன்..


கேளுங்கள் என் கதையை
என்னை அடித்து துவைப்பதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்..
இந்தியாவிலே தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான்
பிறக்க ஒரு ஊர் பிழைக்க ஒரு ஊர்போலிச்சாமியார்களின் தலைஎழுத்துக்கு நான் மட்டும் என்ன விதி விலக்கா???
தமிழ்நாட்டில் இல் பிறந்த நான்
ஜோசியம் பார்க்க ஜோதிடரிடம் ஓடோடி வந்தேன்
ஜாதகம் என்னை நீயொரு மதபோதகம் என்றது... 


என் பெயரோ நித்தியானந்தா
கேட்டாலெ உதைக்க தோன்றும் பெயர்.
ஆனால் என் போதனைக்கு அடிமையாகாத ஏமாளிகளே கிடையாது
நான் மட்டும் நினைத்து இருந்தால் சாமியாராக வராமல் இருந்திருக்கலாம்
ஏதாவது ஒரு மட்டமான படத்தில் சாமியாராக நடித்திருக்கலாம்கஞ்சா பிசினஸ்கழவெடுத்தல் என்று காலத்தை ஓட்டி இருக்கலாம்.
ஆனால் அதைதான் விரும்புகிறதா இந்த பரந்த உலகம்
,
நடிகை மாட்டரில் படத்தைப் போட்டு எரித்தார்கள்.... ஓடினேன்...
மக்களின் காசில் கட்டிய மடத்தை சுக்குநூறாக உடைத்தான்.... ஓடினேன்
நேற்று வந்த சின்ன பொடியன் என் ஜல்சா வீடியோவை யூ டியூப்பில் போட்டான்...... ஓடினேன்
ஓடினேன் ஓடினேன்....

கேரளாவுக்கு ஓடினேன் கர்னாடகாவுக்கு ஓடினேன் பெங்களூருக்கும் ஓடினேன் 

 
 
  
ஓடினேன் ஓடினேன்...... இந்தியாவின் அனைத்து ஊர்களுக்கும் ஓடினேன்...

எனது பக்தர்களின் கொலைவெறித்தாக்குதல் தாங்காமல் திரும்பி வந்து விட்டேன்.

 
என் ஓட்டத்தை நிறுத்தி இருக்க வேண்டும்வீடியோவை யூ டியூப்பில் போக்கி இருக்க வேண்டும்என்னை தப்பியோட கதவைத்திறந்து விட்டிருக்க வேண்டும் இன்று என் முன் சட்டத்தை நீட்டுவோர். 

 
செய்தார்களாதப்பியோட விட்டார்களா இந்த நித்தியானந்தாவைஎன்னை சாமி என்று நம்பி ஏமாந்தது யார் குற்றம்?? எனது குற்றாமாஎன்னை நம்பி ஏமாந்த மூடர்களின் குற்றமா?

 
நான் சொன்னதை நம்பி கதவைத்திறந்து வைத்தது யார் குற்றம்? கதவைத்திற காற்றுவரட்டும் என்று சொன்ன எனது குற்றமாகேனைத்தனமாக என் பேச்சை நம்பிக்கதவைத்திறந்த மூடர்களின் குற்றமா

 
எனது காலைப்பிடித்து விட்டது யார் குற்றம்?,காலைப்பிடித்துவிடும்படி கூறிய எனது குற்றமாஇல்லை மாத்திரை தந்துவிட்டு காலைப்பிடித்து விட்ட நடிகையின் குற்றமா??

 
இந்த குற்றங்கள் எல்லாம் களையப்படும் வரையில்என்னை போன்ற நித்தியானந்தாக்கள்ஏமாற்றும் போலிகளாகத்தான் உருவாகிக்கொண்டிருப்பார்கள்...
__._,_.___

Wednesday, April 7, 2010

நீதிவானில் ஒரு செந்தாரகை நீதிநாயகம் வி.ஆர். கிருஷ்ணய்யர்

நீதிவானில் ஒரு செந்தாரகை
நீதிநாயகம் வி.ஆர். கிருஷ்ணய்யர்
நூல் அறிமுகம் எஸ். பாலா

நான் அவரை சிறந்த நிர்வாகியாக மட்டும் பார்க்கவில்லை. தனது அரசியல் செல்வாக்கை, பதவியை கொண்டு சாதாரண மக்களுக்கு தொண்டு செய்யும் மனிதநேயம் மிக்கவராகவும் பார்த்தேன். அவர் சிறந்த நீதிபதி, நிர்வாகி, அரசியல் செயல்பாட்டாளர் என குறிப்பிட்ட இ.எம்.எஸ் சின் மதிப்பிற்குரிய வார்த்தைகள் அனைத்திற்கும் சொந்தக்காரர் நீதியரசர் கிருஷ்ணய்யர் அவர்கள் ஆவார். அம் மகத்தான மனிதனின் வாழ்க்கையை படிக்க மிகவும் அருமையான வாய்ப்பாக இப்புத்தகம் வெளிவந்துள்ளது.
இந்திய நீதித்துறை வரலாற்றிலும் அரசியல் வரலாற்றிலும் மிகவும் குறிப்பிடத்தக்கவர் வி.ஆர். கிருஷ்ணய்யர் அடிமைப்பட்டுத் கிடந்த பிரிட்டிஷ் இந்தியாவில் 1915 நவ 15ந் தேதி புதிய விடியலுக்காக அவர் உதயமானது முதல் தொடர்ந்து வீரநடைபோட்டு எழுகிறது அவர் வரலாறு.
தன்னுடைய பள்ளிமாணவப் பருவத்தில் துவங்கி கல்லூரி சட்ட மாணவராக, வழக்கறிஞராக, மக்கள் சேவகராக சிறந்த அமைச்சராக, உயர்நீதி மன்ற நீதிபதியாக, சட்டக்கமிஷன் உறுப்பினராக, உச்சநீதிமன்ற நீதிபதியாக பணி நிறைவு பெற்ற பின்னர் அவர் ஆற்றிய பணிகளை இந்நூல் விரிவாக குறிப்பிட்டுள்ளது. அதே சமயத்தில் அவர் வாழ்கையில் கிடைத்த அத்துனை தருணங்களின் போதும் ஏழை எளிய உழைப்பாளி மக்களின் வாழ்வுக்காக, உரிமைக்காக வாதாடியும், போராடியும் வந்துள்ளதை இந்நூல் உரிய முறையில் குறிப்பிடுகிறது.
வி.ஆர். கிருஷ்ணய்யர் தன்னுடைய மக்களின் உரிமைக்காக போராட்டத்தில தன்னை ஈடுபடுத்திக் கொண்டதோடு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு அக்கொடுமையையும் அனுபவித்துள்ளார். 1957ஆம் ஆண்டு வாக்குசீட்டு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவையில் உள்துறை, சிறைத்துறை, பாசனத்துறை அமைச்சராக பதவி வகித்த பின்னரும் கூட லட்சாதிபதியாக இருந்த அவர் சில ஆயிரம் ரூபாய்களோடு ஊர் திரும்பினார் என்பதை அறியும் போது அவரின் தியாகம், எளிமை போன்ற உயரிய பண்பு அவருக்கேயுரியது. இன்றைய அரசியலில் அத்தகைய பண்புகள் மங்கிப்போய் கொண்டிருக்கும் சூழலில் அதனை உயர்த்திப் பிடிக்கும் பணியை செய்பவர்களின் கரத்தை வலுப்படுத்துவது அவசியமாகும்.
மனிதர்களை நேசித்த அந்த மாமனிதன் வாயில்லா ஜூவன்கள் மீதும் தம்முடைய பறிவைக் காட்டத் தவறவில்லை. நோயாளிகள், அடித்தட்டு மக்களின் துன்பங்களில் உடன் நின்று பாதுகாத்தவர் ஆவார்.

காங்கிரசின் சிறுபிள்ளைத் தனம்:
கிருஷ்ணய்யரை நேரடியாக அரசியலில் சந்திக்க முடியாத காங்கிரஸ் தனக்கே உரித்தான சிறுபிள்ளைத்தனமான முயற்சியில் இறங்கி அவரை தங்கள் கட்சியில் சேர்க்க முயற்சி மேற்கொண்டது. மக்களுக்கு துரோகம் என்பதை தம் கனவில் கூட நினைக்காத கிருஷ்ணய்யரிடம் அம்முயற்சி தோல்வியுற்றது என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.
வாழ்க்கை போகும் பக்கம் வளைந்து வாழும் மனிதர்களை உருவாக்கும் சமூகத்தில் தன்னுடைய லட்சியத்தை தீர்மானித்து வாழ்ந்தவர் வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர் தன்னுடைய நீதிபதி பதவி ஏற்கும் உறுதி மொழியில் அதனை வெளிப்படுத்தியது பற்றி இந்நூல் மிகச்சரியாக குறிப்பிட்டுள்ளது.

நாட்டை கலக்கிய தீர்ப்பு
அலகாபாத் தீர்ப்புக்குப் பின் இந்திரா அம்மையார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவ்வழக்கு நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் முன் விசாரனைக்கு வந்தது. முழுமையான தடைக்குப் பதிலாக குறிப்பிட்ட காலத்திற்கான நிபந்தனையுடன் கூடிய இடைக்காலத் தடையை வழங்கினார். அவ்வழக்கு, அதன் சூழ்நிலைகளையும் படம் பிடித்து காட்டுவதைப் போன்று அற்புதமாக காட்சிப்படுத்தி உள்ளார் நூலாசிரியர்.
வேட்டி, சட்டையில் எளிய மனிதராக அங்கு சென்ற போது அவரின் பெருமை அறியாத மூடர்களின் கோட்பாட்டை விமர்சித்துவிட்டு அங்கிருந்து சுயமரியாதையுள்ள பெருமைக்குரிய இந்தியனாக கம்பீரமாகத் திரும்பினார். இச்செயலுக்கு காரணமான சென்னை கிரிக்கெட் கிளப்பை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எப்.ஐ) தொழிற்சங்க இயக்கமும் ஆர்ப்பாட்டம் செய்தது என்ற தக்வலும் இந்நூலில் உரிய முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்படி வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களின் வாழ்க்கை சம்பவங்களை அதில் அவரின் வார்த்தைகளைக் கொண்டே மிக நேர்த்தியாக அடுக்கி அற்புதமாக நூல் எழுதப்பட்டுள்ளது.
அதேபோல் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒன்றுபட்ட போராட்டத்தில் ஈடுபட்ட அவர் குடியரசுத் தலைவர் தேர்தல் துவங்கி குஜராத் இனப்படுக்கொலை என தொடர்ந்து அக்கோட்பாட்டை உயர்த்தி பிடித்துள்ளார் என்பதும், இந்திய சமூகத்தின் அவமான சின்னமான சாதிய முறையும், அதற்குஎதிரான போராட்டம் பற்றியும், அவர்மீதான அவமதிப்பு வழக்குளையும் மிகுந்த அக்கறையோடு சுட்டிக்காட்டி விளக்கி உள்ளது இப்புத்தகம்.
ஏழை எளிய உழைப்பாளி மக்களின் மனித உரிமையை பாதுகாத்து நீதிமன்றத்தை நீதியின் ஆலயங்களாக மாற்றும் மிக முக்கிய வரலாற்றுக் கடமையை ஆற்றியவர் என்பதை இந்நூலில் அறியமுடிகிறது.
அதே போல கேரளா முதல்வர் அச்சுதானந்தன் தலைமையிலான இடது முன்னணி கடந்த 2009 குடியரசு தினத்தன்று அர-சிடம் எந்த ஒரு பலனும் பெறாமல் கடும் உழைப்பால் உருவாக்கப்பட்ட சட்ட சீர்திருத்த கமிஷன் பரிந்துரையை அதன் தலைவர் கிருஷ்ணய்யர் சட்ட அமைச்சர்களிடம் வழங்கினார். 65 புதிய சட்ட மசோதா, 30 சட்ட திருத்த மசோதா, விதிகள், நடைமுறைகள் என 104 மசோதாவை வடிவமைத்து சாதனையைத் தொடர்ந்தார் அச்சிற்பி.
நீதியரசர் கிருஷ்ணய்யர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை உலக அரசியல், இந்திய அரசியல், கேரள அரசியல் பின்னணியுடன் அலசி மிகவும் அற்புதமான முறையில் இந்நூலை எழுதியுள்ள நூலாசிரியர் அ. மகபூப்பாட்சா அவர்கள் நம் அன்பிற்கும், பாராட்டிற்கும் உரியவர்.
உலகமய சூழ்ச்சியால் ஏகாதிபத்திய, முதலாளித்துவ, மதவெறி அரசியல் மக்களை மேலும், மேலும் பிளவுபடுத்திக் கொண்டிருக்கும் சூழலில் நீதியரசர் கிருஷ்ணய்யரின் வாழ்க்கை, வரலாறு அதனை முறியடிக்கும் அற்புதமான ஆயுதமாக திகழும். இந்நூலின் தத்துவப்பார்வை இந்திய மக்களின் சமூக பொருளாதார விடுதலைக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்காக உள்ளது சிறப்பம்சம்.
இத்துடன் கிருஷ்ணய்யரின் தாத்தா, அப்பா, தாய், உடன் பிறந்தவர்கள், மனைவி வாரிசுஎன அவர்களின் உயரிய பங்குகள் இந்நூலில் மிகவும் அற்புதமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய முக்கியமான அம்சங்களை பல இந்நூலை நாம் படிக்கும் போது உள்வாங்கிட முடியும்.
இந்நூல் அறிமுகத்தில் வி.ஆர். கிருஷ்ணய்யர் போன்ற உயர்ந்த மனிதர்களின் வாழ்க்கை வரலாறு இன்றைய இளைஞர்கள் படிக்க வேண்டிய வரலாறாக உள்ளது. அவர் நடந்துகாட்டிய பாதையில் அடியெடுத்து நாமும் பின் செல்ல வேண்டியது அவசியம். அவரின் வாழ்க்கை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டிய வரலாறாகவும் உள்ளது. அத்துடன் அவர் பாடுபட்ட தொழிலாளி, விவசாயி, ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட மக்களின் மனித உரிமைகளை வாழ்வாதாரங்களை பெற்றுத்தரபாடுபடுவது அவரின் உயர்ந்த லட்சியத்திற்கு செய்யும் காணிக்கையாக இருக்கும்.
அவரின் பன்முகத் திறன்இளைஞர்களுக்கு முன்மாதிரியான ஒன்றாக உள்ளது. கிருஷ்ணய்யர் வாழ்க்கை ஒரு வரலாறாகவே உள்ளது என்பதை இந்நூலின் மூலம் அறியமுடியும் என்பதால் அவசியம் படித்து இளைஞர்கள் பயன்பெற்றிட வேண்டும்.

வெளியீடு:
நீதிவானின் ஒரு செந்தாரகை
ஆசிரியர் அ. மகபூப் பாட்சா
சோக்கோ அறக்கட்டளை
கே.கே. நகர், மதுரை -20
ரு. 200

Friday, March 12, 2010

என்ன நீங்க? இப்பயெல்லாம் யாரு சாதிபாக்கிறா?


யானை வைத்து தன்வசதி பெருக விவசாயம் பார்த்த பெருமை உள்ளதாக கூறிக் கொள்ளும் மதுரையிலிருந்து 5 கிலோ மீட்டர் அருகில் நடந்த சம்பவம்,

1. சுதந்திரம்பெற்று 62 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் ஒரு நாள் முன்பு [ஆகஸ்ட் 13 அன்று] சரியாக பட்டப்பகல் மதியம் 1.15 மணிக்கு முதுநிலை பட்டம் பயின்று ஆசிரியர் பயிற்சி படித்து கொண்டிருக்கும் மாணவன் முருகன் சைக்கிள் தன்னுடைய ஊரில் செல்லுகிறார்.

தோட்டியின் மகன் சைக்கிள்ள போறியா-? என்று தாக்கத் துவங்கிய அக்கும்பல் பெரும் கல்லை எடுத்து மண்டையில் போடுகிறது. மண்டை பிளந்து இரத்த வெள்ளத்தில் அந்த இளைஞன் மயங்கி தரையில் விழுகிறான். பின்னர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படும் முருகனின் தலையில் 13 தையல் போடப்படுகிறது. அரசு மருத்துவமனையில் 13 நாட்கள் சிகிச்சை பெறுகிறார். கடமை, கண்ணியம், கட்டுப்பட்டை பரிசித்து காவல் துறை வழக்கு பதிவு செய்கிறது. அது முருகன் மீதும், மத்திய அரசின் நிர்மல் புரஷ்கார் விருது வடிவேல்கரை ஊராட்சிக்கு பெறக் காரணமாக இருந்த ஊர்த் துப்புரவுத் தொழிலாளி முருகனின் தந்தை அம்மாசி மீதும்-? இது சம்பவத்தின் ஒரு அரசின் நடவடிக்கை.

2. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இருந்து 17 கிலோ மீட்டர் தூரம் உள்ள உத்தப்புரம் கிராமத்தில் மே 6 அன்று காலை 1600க்கும் மேற்பட்ட போலிஸ் படை, காவல்துறை கண்காணிப்பாளர் துவங்கி காவலர் வரை என அனைவரும் தங்களுடைய ஆயுதங்களோடு குவிக்கப்படுகின்றனர். இதுமட்டுமா? அதி நவீன ஜே.சி.பி இயந்திரத்தில் துவங்கி கடப்பாரை வரை அங்கு கொண்டு வந்து சேர்க்கப்படுகிறது.

ஊராட்சி அளவே உள்ள ஒரு கிராமத்திற்கு காவல்துறையினர் தன்னுடைய ரத,கஜ,தூர சேனாதிபதிகளோடு அணிவகுக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? அங்கு சென்ற காவல்துறையினர் என்ன செய்தனர்?.

16 கற்களைஅப்புறப்படுத்தினர். இதற்கு இத்தனை ஏற்பாடா! தமிழக முதல்வர் முதல் கடைநிலை காவலர் வரை தலையிடும் அளவிற்கு சுவரோடு இருந்த வெறும் 16 கற்களுக்கு எங்கிருந்து வந்தது இந்த ஆணவம்?

3. விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், காங்கியனூரில் உள்ள திரௌபதி அம்மன் ஆலயம் உள்ளது. இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆனபின்பும் செப் 30 அன்று கோயிலுக்குள் சாமி கும்பிட செல்லும் தலித் மக்கள் மீது வரமாக தடியடியும், 120 க்கும் மேற்பட்டடோரை சிறைக்குப் அனுப்பி பரிசுத் தந்த மர்மம் என்ன?

4. தன்னுடைய குழந்தையின் மலத்தை சுத்தம் செய்யவே சங்கடப்படும் அளவுக்கு இன்றைய சமுகம் மாறியுள்ளது. இந்நிலையில் காலை கண் திறந்து மலம் அள்ளும் பணிக்கு சென்று மலத்தோடு துவங்கும் வாழ்க்கை, அன்று பணி நிறைவு செய்யபடும்வரையும். பின்பு மறுநாளும் இதே மலத்தோடு என்று தொடர்வது நாகரிக உலகின் அவமானம்.

மனித மலத்தை மனிதன் அள்ளி எடுத்து தன் தலையில் சுமக்கும் அவலநிலை எப்போது உருவானது? ஏன் உருவானது? அதற்கு மாற்று வழியேதும் இல்லையா? எதற்கு அதனை ஒருசாரார் மட்டும் செய்யும் அவல=நிலை?

5. மேலூர் பேருந்து நிலையத்தில் பஸ் ஏறி தன் ஊர் நோக்கிப் பயணிக்கின்றனர் அம்மக்கள். ஊர் நோக்கி விரைந்து செல்லும் பஸ் தடுத்து நிறுத்தப்படுகிறது. அங்கு ஒரு கும்பல் அரிவாள், வேல்கம்புகளோடு பஸ்சுக்குள் ஏறுகின்றனர். சிதரி ஓடும் மக்களை விரட்டி அரிவாள்களோடு கொலைகார கும்பல் வயல்வெளிகளில் துரத்துகின்றனர். அங்கு 6பேர் படுகொலை செய்யப்படுகின்றனர். படுகொலை செய்யக்கூடிய அளவு அவர்கள் செய்த குற்றம் என்ன? எந்த ஊர் நோக்கி பஸ் சென்று கொண்டிருந்தது? எப்போது நடந்தது? யாரால் நடந்தது? காரணம் என்ன?

1. பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டவர்கள்
2. மேலவளவு தலைவரானார்கள்
3. 1997 மே 30
4. ஆதிக்க சாதிகள்
5. பஞ்சாயத்து தலைவராவதா?


இதுமட்டுமா! நெல்லை மாவட்டம் நக்கலமுத்தன் பட்டி பஞ்சாயத்துத் தலைவர் ப. ஜக்கன், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் மருதன்கிணறு பஞ்சாயத்துத் தலைவர் சேர்வாரன், தலித் மக்களுக்கு பாடுபட்ட திருப்பூர் மாவட்டம் இடுவாய் பஞ்சாயத்து தலைவர் இரத்தினசாமி என படுகொலை செய்யப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் பட்டியல் தொடர்வது ஏன்?

தமிழகத்தின் வெவ்வேறு இடத்தில் நடந்த வெவ்வேறு சம்பவத்திற்கு ஒரே காரணம். எல்லாவற்றிற்கும் காரணம் ஒன்றுதான். ஆம் எனில் காரணம் என்ன?

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. ஆம் அதன் மறு பெயர்தான் தீண்டாமை. இப்படி ஆயிரம் சம்பவங்களை, இல்லை ., இல்லை ., அதற்கும்மேல் பட்டியலிட முடியும். அதற்கான ஆதாரத்தையும் நாம் காட்ட முடியும்.

தீண்டாமை ஒரு பாவச்செயல், பெருங்குற்றம், மனிதத் தன்மையற்ற செயல்என இக்கொடுமையை விளிக்கிறது பாடப் புத்தகத்தின் முதல் பக்கம். பின் ஏன் தொடர்கிறது? இப்போதா இருக்கிறது. காலம் காலமாய் இருக்கிறது என்கின்றனர். இதற்கு ஆதாரமாய் வேதத்தை இதிகாசத்தை புராணத்தை என எடுத்து நீட்டுகின்றனர்.நாம் மறுத்தால், கூடாது என்றால் அது விதித்துள்ள படி நீதி வழங்கப்படுகிறது. அது என்றால் எது? அதுதான் நீதி? நீதி என்றால் முதலில் குறிப்பிட்ட முருகன் பாதிக்கப்பட்ட கொடுமையில் , முருகன் மீது அல்லவா வழக்கு போட்டது காவல்துறை.

இது எந்த வகை நீதி!
அதுதான் மனுநீதி.

அய்யோ! இது அநீதி. ஆம் உண்மை. காலம்காலமாய் ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு தொடர்கின்ற அநீதி. தீண்டாமை எனும் அநீதி.
இந்திய சமூகத்தில் இரண்டு ஆயிரம் ஆண்டு காலம் நீடிக்கின்ற இந்த அநீதி, தொழில் அடிப்படையில் உருவான ஜாதியும், அதன்மீது கட்டமைக்கப்பட்ட அதிகாரமும் தொடர்ந்து நீடிக்க அடிப்படையாக அமைகிறது. இதனை பலப்படுத்த அகமண முறையும், தண்டனையும், கட்டுப்பாடுகளும் என உறுதிப்படுத்திட ஏராளமான முறை கையாளப்படுகிறது. இதற்கான வாய்ப்புகளும், சூழலும் உருவாக்கப்பட்டு ஆண்டாண்டு காலமாக பாதுகாக்கபட்டு வருகிறது.

இந்திய நாட்டிலே உருவான பல்லேறு தத்துவங்களும், உலகம் எப்படி துவங்கியது என்ற புள்ளியல் இருந்து துவங்கி விரிந்து பரந்த விவாதத்தை நடத்தி உள்ளது. இத்தகைய விவாதத்தில் மனுதர்மமும் அதனை பின்பற்றியவர்களுக்கும் பிறருக்கும் தொடர் விவாதம் நீடித்து வந்தது. இதிலிருந்து தீண்டாமை எனும் சமூக கொடுமை தலைமுறை தலைமுறையாக தலித் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது என்பதை உணரமுடியும்.

காந்தியின் வாழ்க்கை வரலாற்றில் வரும் சம்பவம். தென் ஆப்ரிக்கா செல்வந்தரின் வழக்கினை வாதாட மோகன் தாஸ் கரம்சந்த் அவர்கள் புகைவண்டியில் முதல் வகுப்பு பெட்டியில் அமர்ந்து செல்வார். ஆனால் அவரை இறங்கச் சொல்வார்கள். அப்போது தன்னைபற்றி அவர் முழுமையாகப் கூறியப் பின்பும், அவரை இறக்கி விடுவார்கள். மூன்றாம் வகுப்பிற்கு செல்லவும் முன்னதாகவே எச்சரிக்கப்படுவர். காரணம் என்ன தெரியுமா? அவர் கறுப்பு இனத்தவர் என்ற காரணம் மட்டுமே.

இதனால் காந்தி தன் வாழ்நாளில் இன ஒடுக்குமுறையை விட கொடுமையான தீண்டாமையை மட்டும் எதிர்த்து வந்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில், குற்றாலம் அருவிக்கு செல்ல மறுத்து தலித் மக்கள் பயன்படுத்திய பின்பு தான் தாம் செல்வதாக கூறினார். மதுரை 6 முறை வந்தபோதும் முதல் இருமுறை கோவிலுக்கு செல்லவில்லை.

இச்சூழலில் இக்கொடுமைக்கு எதிரான குரல் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. பிரிட்டிஷ் அரசும் தன்னுடைய 1911ஆம் ஆண்டு நடத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் தீண்டாதோரை தனியே பிரிக்க பத்து நெறிமுறைகளை வகுத்தது. அந்நெறிமுறை மனுதர்மத்தின் பிரதிபலிப்புதான் என்பதை அறிய முடியும். அத்தகைய கொடுமையான முறையே பின்பற்றி உள்ளது. அதன் ஆவணங்களல் இருந்துஅறியலாம். காந்தி தீண்டாமை கடைபிடிக்க கூடாது என்று கூறியபோதும், ஹரிஜன் சேவாசங்கம் வைத்து பிரச்சாரம செய்தபோதும் இத்தகைய அநாகரீகம் தொடர்ந்தே வந்துள்ளது.

டாக்டர் அம்பேத்கர் ஆவேசமிக்க நேரடிப் போராட்டங்களையும், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயப்பிரதேசத்தில் வைத்தியநாத ஐயர், கம்யூனிஸ்ட் தலைவர் பி. ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் தலைமையில் நடைபெற்றது. இதனை ஜோதிராவ்புலே, தந்தை பெரியார், பி. சீனிவாசராவ் என ஆதிக்கத்திற்கு எதிரானபோர்க்குரல் தொடர்கிறது. இத்தகைய உயரிய வரலாற்றில் பலியானவர்கள் உடைமை இழந்தவர்கள் எண்ணிக்கை கணக்கற்றது.

என்ன நீங்க? இப்பயெல்லாம் யாரு சாதிபாக்கிறா? என்று கேட்கிறீர்கள். நவ நாகரிமான தொழில்நுட்பம் புகுந்துவிட்ட சென்னையில் தலித்துகளுக்கு வீடு வாடகைக்கு தரமறுப்பதை தீண்டாமையின் புதுவடிவம் என்பதை சொல்லி தெரியவேண்டிதில்லை. அதே போல் மேற் குறிப்பிட்ட உத்தப்புரம், காங்கியனூர், வடிவேல்கரை என தமிழகத்தில் மொத்தம் 7000ஆயிரம் கிராமங்களில் பல்வேறு வடிவங்களில் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. கோயில் நுழைவு மறுப்பு, இரட்டை டம்ளர், சலூன் கடையில் முடிவெட்ட மறுப்பு, பொதுபாதையில் நடக்க, தண்ணீர் எடுக்க தடை, தலித்துக்கான சுடுகாட்டு பாதை மறுப்பு, சலூன் கடையில் இரட்டை சேர், கழிப்பிடம் பயன்படுத்த மறுப்பு, சைக்கிளில் செல்ல தடை, பொதுசொத்தை பயன்படுத்த தடை, பஞ்சமி நிலம், பட்டா மறுப்பு, பொதுக்குளத்தில் நீர் எடுக்க தடை எண்ணற்ற வடிவங்களில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் இக்கொடுமை தொடருகின்றது.

தீண்டாமையினை காலம் காலமாய் இருப்பது என்று விட்டு விடமுடியாது. இது வேரோடும், வேரடி மண்ணோடும் வெட்டி எறிய வேண்டிய ஒன்றாக நம் மண்ணில் உள்ளது.

இந்திய நாட்டின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒருவர், அதாவது 19% உள்ள தலித் மக்களின் வாழ்க்கையில் விடியல் அவசியமானதாகும். இதுவே, இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு முழு அர்த்தமாகும்.

ஆனால், இன்றும் முயலுக்கும், ஆமைக்கும் போட்டி நடந்ததாக கூறும் கதையை விட்டொழித்து விடுவது அவசியமானதாகும். முயலுக்கும், ஆமைக்கும் போட்டி வைப்பது எனும் தத்துவம் நியாமற்றது மட்டுமல்ல. அது அநீதியானதும் கூட எனவே, சாதிக்கொரு நீதி எனும் அநீதியை தூக்கி எறிந்து சமத்துவமான ஒடுக்குமுறையற்ற உலகினை உருவாக்க கரம் கோர்ப்போம். இம்மாற்றத்தை உருவாக்குவது இன்றைய காலத்தின் வரலாற்று தேவை.