Friday, March 12, 2010

என்ன நீங்க? இப்பயெல்லாம் யாரு சாதிபாக்கிறா?


யானை வைத்து தன்வசதி பெருக விவசாயம் பார்த்த பெருமை உள்ளதாக கூறிக் கொள்ளும் மதுரையிலிருந்து 5 கிலோ மீட்டர் அருகில் நடந்த சம்பவம்,

1. சுதந்திரம்பெற்று 62 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் ஒரு நாள் முன்பு [ஆகஸ்ட் 13 அன்று] சரியாக பட்டப்பகல் மதியம் 1.15 மணிக்கு முதுநிலை பட்டம் பயின்று ஆசிரியர் பயிற்சி படித்து கொண்டிருக்கும் மாணவன் முருகன் சைக்கிள் தன்னுடைய ஊரில் செல்லுகிறார்.

தோட்டியின் மகன் சைக்கிள்ள போறியா-? என்று தாக்கத் துவங்கிய அக்கும்பல் பெரும் கல்லை எடுத்து மண்டையில் போடுகிறது. மண்டை பிளந்து இரத்த வெள்ளத்தில் அந்த இளைஞன் மயங்கி தரையில் விழுகிறான். பின்னர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படும் முருகனின் தலையில் 13 தையல் போடப்படுகிறது. அரசு மருத்துவமனையில் 13 நாட்கள் சிகிச்சை பெறுகிறார். கடமை, கண்ணியம், கட்டுப்பட்டை பரிசித்து காவல் துறை வழக்கு பதிவு செய்கிறது. அது முருகன் மீதும், மத்திய அரசின் நிர்மல் புரஷ்கார் விருது வடிவேல்கரை ஊராட்சிக்கு பெறக் காரணமாக இருந்த ஊர்த் துப்புரவுத் தொழிலாளி முருகனின் தந்தை அம்மாசி மீதும்-? இது சம்பவத்தின் ஒரு அரசின் நடவடிக்கை.

2. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இருந்து 17 கிலோ மீட்டர் தூரம் உள்ள உத்தப்புரம் கிராமத்தில் மே 6 அன்று காலை 1600க்கும் மேற்பட்ட போலிஸ் படை, காவல்துறை கண்காணிப்பாளர் துவங்கி காவலர் வரை என அனைவரும் தங்களுடைய ஆயுதங்களோடு குவிக்கப்படுகின்றனர். இதுமட்டுமா? அதி நவீன ஜே.சி.பி இயந்திரத்தில் துவங்கி கடப்பாரை வரை அங்கு கொண்டு வந்து சேர்க்கப்படுகிறது.

ஊராட்சி அளவே உள்ள ஒரு கிராமத்திற்கு காவல்துறையினர் தன்னுடைய ரத,கஜ,தூர சேனாதிபதிகளோடு அணிவகுக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? அங்கு சென்ற காவல்துறையினர் என்ன செய்தனர்?.

16 கற்களைஅப்புறப்படுத்தினர். இதற்கு இத்தனை ஏற்பாடா! தமிழக முதல்வர் முதல் கடைநிலை காவலர் வரை தலையிடும் அளவிற்கு சுவரோடு இருந்த வெறும் 16 கற்களுக்கு எங்கிருந்து வந்தது இந்த ஆணவம்?

3. விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், காங்கியனூரில் உள்ள திரௌபதி அம்மன் ஆலயம் உள்ளது. இந்திய அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆனபின்பும் செப் 30 அன்று கோயிலுக்குள் சாமி கும்பிட செல்லும் தலித் மக்கள் மீது வரமாக தடியடியும், 120 க்கும் மேற்பட்டடோரை சிறைக்குப் அனுப்பி பரிசுத் தந்த மர்மம் என்ன?

4. தன்னுடைய குழந்தையின் மலத்தை சுத்தம் செய்யவே சங்கடப்படும் அளவுக்கு இன்றைய சமுகம் மாறியுள்ளது. இந்நிலையில் காலை கண் திறந்து மலம் அள்ளும் பணிக்கு சென்று மலத்தோடு துவங்கும் வாழ்க்கை, அன்று பணி நிறைவு செய்யபடும்வரையும். பின்பு மறுநாளும் இதே மலத்தோடு என்று தொடர்வது நாகரிக உலகின் அவமானம்.

மனித மலத்தை மனிதன் அள்ளி எடுத்து தன் தலையில் சுமக்கும் அவலநிலை எப்போது உருவானது? ஏன் உருவானது? அதற்கு மாற்று வழியேதும் இல்லையா? எதற்கு அதனை ஒருசாரார் மட்டும் செய்யும் அவல=நிலை?

5. மேலூர் பேருந்து நிலையத்தில் பஸ் ஏறி தன் ஊர் நோக்கிப் பயணிக்கின்றனர் அம்மக்கள். ஊர் நோக்கி விரைந்து செல்லும் பஸ் தடுத்து நிறுத்தப்படுகிறது. அங்கு ஒரு கும்பல் அரிவாள், வேல்கம்புகளோடு பஸ்சுக்குள் ஏறுகின்றனர். சிதரி ஓடும் மக்களை விரட்டி அரிவாள்களோடு கொலைகார கும்பல் வயல்வெளிகளில் துரத்துகின்றனர். அங்கு 6பேர் படுகொலை செய்யப்படுகின்றனர். படுகொலை செய்யக்கூடிய அளவு அவர்கள் செய்த குற்றம் என்ன? எந்த ஊர் நோக்கி பஸ் சென்று கொண்டிருந்தது? எப்போது நடந்தது? யாரால் நடந்தது? காரணம் என்ன?

1. பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டவர்கள்
2. மேலவளவு தலைவரானார்கள்
3. 1997 மே 30
4. ஆதிக்க சாதிகள்
5. பஞ்சாயத்து தலைவராவதா?


இதுமட்டுமா! நெல்லை மாவட்டம் நக்கலமுத்தன் பட்டி பஞ்சாயத்துத் தலைவர் ப. ஜக்கன், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் மருதன்கிணறு பஞ்சாயத்துத் தலைவர் சேர்வாரன், தலித் மக்களுக்கு பாடுபட்ட திருப்பூர் மாவட்டம் இடுவாய் பஞ்சாயத்து தலைவர் இரத்தினசாமி என படுகொலை செய்யப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் பட்டியல் தொடர்வது ஏன்?

தமிழகத்தின் வெவ்வேறு இடத்தில் நடந்த வெவ்வேறு சம்பவத்திற்கு ஒரே காரணம். எல்லாவற்றிற்கும் காரணம் ஒன்றுதான். ஆம் எனில் காரணம் என்ன?

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. ஆம் அதன் மறு பெயர்தான் தீண்டாமை. இப்படி ஆயிரம் சம்பவங்களை, இல்லை ., இல்லை ., அதற்கும்மேல் பட்டியலிட முடியும். அதற்கான ஆதாரத்தையும் நாம் காட்ட முடியும்.

தீண்டாமை ஒரு பாவச்செயல், பெருங்குற்றம், மனிதத் தன்மையற்ற செயல்என இக்கொடுமையை விளிக்கிறது பாடப் புத்தகத்தின் முதல் பக்கம். பின் ஏன் தொடர்கிறது? இப்போதா இருக்கிறது. காலம் காலமாய் இருக்கிறது என்கின்றனர். இதற்கு ஆதாரமாய் வேதத்தை இதிகாசத்தை புராணத்தை என எடுத்து நீட்டுகின்றனர்.நாம் மறுத்தால், கூடாது என்றால் அது விதித்துள்ள படி நீதி வழங்கப்படுகிறது. அது என்றால் எது? அதுதான் நீதி? நீதி என்றால் முதலில் குறிப்பிட்ட முருகன் பாதிக்கப்பட்ட கொடுமையில் , முருகன் மீது அல்லவா வழக்கு போட்டது காவல்துறை.

இது எந்த வகை நீதி!
அதுதான் மனுநீதி.

அய்யோ! இது அநீதி. ஆம் உண்மை. காலம்காலமாய் ஒடுக்கப்பட்ட தலித் மக்களுக்கு தொடர்கின்ற அநீதி. தீண்டாமை எனும் அநீதி.
இந்திய சமூகத்தில் இரண்டு ஆயிரம் ஆண்டு காலம் நீடிக்கின்ற இந்த அநீதி, தொழில் அடிப்படையில் உருவான ஜாதியும், அதன்மீது கட்டமைக்கப்பட்ட அதிகாரமும் தொடர்ந்து நீடிக்க அடிப்படையாக அமைகிறது. இதனை பலப்படுத்த அகமண முறையும், தண்டனையும், கட்டுப்பாடுகளும் என உறுதிப்படுத்திட ஏராளமான முறை கையாளப்படுகிறது. இதற்கான வாய்ப்புகளும், சூழலும் உருவாக்கப்பட்டு ஆண்டாண்டு காலமாக பாதுகாக்கபட்டு வருகிறது.

இந்திய நாட்டிலே உருவான பல்லேறு தத்துவங்களும், உலகம் எப்படி துவங்கியது என்ற புள்ளியல் இருந்து துவங்கி விரிந்து பரந்த விவாதத்தை நடத்தி உள்ளது. இத்தகைய விவாதத்தில் மனுதர்மமும் அதனை பின்பற்றியவர்களுக்கும் பிறருக்கும் தொடர் விவாதம் நீடித்து வந்தது. இதிலிருந்து தீண்டாமை எனும் சமூக கொடுமை தலைமுறை தலைமுறையாக தலித் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது என்பதை உணரமுடியும்.

காந்தியின் வாழ்க்கை வரலாற்றில் வரும் சம்பவம். தென் ஆப்ரிக்கா செல்வந்தரின் வழக்கினை வாதாட மோகன் தாஸ் கரம்சந்த் அவர்கள் புகைவண்டியில் முதல் வகுப்பு பெட்டியில் அமர்ந்து செல்வார். ஆனால் அவரை இறங்கச் சொல்வார்கள். அப்போது தன்னைபற்றி அவர் முழுமையாகப் கூறியப் பின்பும், அவரை இறக்கி விடுவார்கள். மூன்றாம் வகுப்பிற்கு செல்லவும் முன்னதாகவே எச்சரிக்கப்படுவர். காரணம் என்ன தெரியுமா? அவர் கறுப்பு இனத்தவர் என்ற காரணம் மட்டுமே.

இதனால் காந்தி தன் வாழ்நாளில் இன ஒடுக்குமுறையை விட கொடுமையான தீண்டாமையை மட்டும் எதிர்த்து வந்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில், குற்றாலம் அருவிக்கு செல்ல மறுத்து தலித் மக்கள் பயன்படுத்திய பின்பு தான் தாம் செல்வதாக கூறினார். மதுரை 6 முறை வந்தபோதும் முதல் இருமுறை கோவிலுக்கு செல்லவில்லை.

இச்சூழலில் இக்கொடுமைக்கு எதிரான குரல் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. பிரிட்டிஷ் அரசும் தன்னுடைய 1911ஆம் ஆண்டு நடத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் தீண்டாதோரை தனியே பிரிக்க பத்து நெறிமுறைகளை வகுத்தது. அந்நெறிமுறை மனுதர்மத்தின் பிரதிபலிப்புதான் என்பதை அறிய முடியும். அத்தகைய கொடுமையான முறையே பின்பற்றி உள்ளது. அதன் ஆவணங்களல் இருந்துஅறியலாம். காந்தி தீண்டாமை கடைபிடிக்க கூடாது என்று கூறியபோதும், ஹரிஜன் சேவாசங்கம் வைத்து பிரச்சாரம செய்தபோதும் இத்தகைய அநாகரீகம் தொடர்ந்தே வந்துள்ளது.

டாக்டர் அம்பேத்கர் ஆவேசமிக்க நேரடிப் போராட்டங்களையும், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயப்பிரதேசத்தில் வைத்தியநாத ஐயர், கம்யூனிஸ்ட் தலைவர் பி. ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் தலைமையில் நடைபெற்றது. இதனை ஜோதிராவ்புலே, தந்தை பெரியார், பி. சீனிவாசராவ் என ஆதிக்கத்திற்கு எதிரானபோர்க்குரல் தொடர்கிறது. இத்தகைய உயரிய வரலாற்றில் பலியானவர்கள் உடைமை இழந்தவர்கள் எண்ணிக்கை கணக்கற்றது.

என்ன நீங்க? இப்பயெல்லாம் யாரு சாதிபாக்கிறா? என்று கேட்கிறீர்கள். நவ நாகரிமான தொழில்நுட்பம் புகுந்துவிட்ட சென்னையில் தலித்துகளுக்கு வீடு வாடகைக்கு தரமறுப்பதை தீண்டாமையின் புதுவடிவம் என்பதை சொல்லி தெரியவேண்டிதில்லை. அதே போல் மேற் குறிப்பிட்ட உத்தப்புரம், காங்கியனூர், வடிவேல்கரை என தமிழகத்தில் மொத்தம் 7000ஆயிரம் கிராமங்களில் பல்வேறு வடிவங்களில் தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறது. கோயில் நுழைவு மறுப்பு, இரட்டை டம்ளர், சலூன் கடையில் முடிவெட்ட மறுப்பு, பொதுபாதையில் நடக்க, தண்ணீர் எடுக்க தடை, தலித்துக்கான சுடுகாட்டு பாதை மறுப்பு, சலூன் கடையில் இரட்டை சேர், கழிப்பிடம் பயன்படுத்த மறுப்பு, சைக்கிளில் செல்ல தடை, பொதுசொத்தை பயன்படுத்த தடை, பஞ்சமி நிலம், பட்டா மறுப்பு, பொதுக்குளத்தில் நீர் எடுக்க தடை எண்ணற்ற வடிவங்களில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் இக்கொடுமை தொடருகின்றது.

தீண்டாமையினை காலம் காலமாய் இருப்பது என்று விட்டு விடமுடியாது. இது வேரோடும், வேரடி மண்ணோடும் வெட்டி எறிய வேண்டிய ஒன்றாக நம் மண்ணில் உள்ளது.

இந்திய நாட்டின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒருவர், அதாவது 19% உள்ள தலித் மக்களின் வாழ்க்கையில் விடியல் அவசியமானதாகும். இதுவே, இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு முழு அர்த்தமாகும்.

ஆனால், இன்றும் முயலுக்கும், ஆமைக்கும் போட்டி நடந்ததாக கூறும் கதையை விட்டொழித்து விடுவது அவசியமானதாகும். முயலுக்கும், ஆமைக்கும் போட்டி வைப்பது எனும் தத்துவம் நியாமற்றது மட்டுமல்ல. அது அநீதியானதும் கூட எனவே, சாதிக்கொரு நீதி எனும் அநீதியை தூக்கி எறிந்து சமத்துவமான ஒடுக்குமுறையற்ற உலகினை உருவாக்க கரம் கோர்ப்போம். இம்மாற்றத்தை உருவாக்குவது இன்றைய காலத்தின் வரலாற்று தேவை.

3 comments:

  1. //முயலுக்கும், ஆமைக்கும் போட்டி வைப்பது எனும் தத்துவம் நியாமற்றது மட்டுமல்ல. அது அநீதியானதும் கூட//

    ரொம்ப சரியா சொன்னீங்க..
    இத்தனை நாளாய் எங்க இருந்தீங்க நீங்க?
    நல்ல கருத்துக்களை சொல்ற உங்கள மாதிரி ஆளுங்கல்லாம் தொடர்ந்து எழுதணும்.

    ReplyDelete
  2. என்ன நீங்க? இப்பயெல்லாம் யாரு சாதிபாக்கிறா? என்று கேட்கிறீர்கள். நவ நாகரிமான தொழில்நுட்பம் புகுந்துவிட்ட சென்னையில் தலித்துகளுக்கு வீடு வாடகைக்கு தரமறுப்பதை தீண்டாமையின் புதுவடிவம்.//

    இத்துடன் திருப்பூரில் தலித் பகுதிகளை மறைத்து பல சுவர்கள் எழும்பி வருகின்றன எனும் செய்தியையும் பதிய விரும்புகிறேன் ..

    நல்ல பதிவு பாலா. . தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  3. அரவிந்தன்
    நல்ல பதிவு இன்னும் சிறப்பாக செய்க..

    ReplyDelete